Monday, 27 July 2020

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - முதல் அத்தியாயம்

"மனிதப் பாலுணர்வுகளை இலகுவில் தூண்டக் கூடிய வகையில் காட்சிகள் அல்லது நடத்தைகள் அமைவது" ஆபாசம் எனப்படும். "மனிதன் பாலுணர்வுக்கு அடிமையாவதால்.. தனி மனித மற்றும் சமூக ஒழுக்கங்கள்..( இவை மனித வாழ்வியலுக்கு அவசியம்).. சீர்குலைய நேரிடலாம் என்ற வகையில்" ஆபாசம் சமூக அமைப்புகளினது தடை அல்லது கட்டுப்படுத்தலுக்கு உட்பட்டது.
இப்போது இலக்கியத்தில் கூறியுள்ள புணர்ச்சி பற்றி பார்க்கலாம் .
சங்ககாலத்தில் ஐவகை நிலங்களையும் ஐவகைப் பண்பாடுகளையும் காண்கிறோம். திணை என்பது நிலத்தையும் ஒழுக்கத்தையும் குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. அகத்திணை ஒழுக்கங்களாக புணருதல் (குறிஞ்சி), இருத்தல் (முல்லை), ஊடல் (மருதம்), இரங்கல் (நெய்தல்), பிரிதல் (பாலை) எனச் சங்கப் புலவர் மரபு வரையறை செய்துள்ளது. ஒழுக்கம் அல்லது நடத்தை அவர்களின் பொருளில் வாழ்வின் பிம்பங்களாக பிரதிபலிக்கிறது.
தகாப்புணர்ச்சி அல்லது அகமணம் என்ற நிலையிலும், வேட்டையை மட்டும் பொருளியல் அடிப்படையாகக் கொண்டதுமான தாய்வழிச் சமூகத்தை சங்க இலக்கியம் பதிவு செய்யவில்லை. மாறாக தகுபுணர்ச்சியும்(புறமணம்) வேட்டையுடன் உணவு சேகரிக்கக் கற்றுக் கொண்டதுமான இனக்குழு (தாய்வழிச் சமூகம்) சமூகத்தையே காண முடிகிறது. அக மணமுறையிலிருந்து புறமணமுறைக்கு நுழையும் பொழுது, அச்சமூகம் பண்பாடு என்ற எல்லைக்குள் நுழைந்துவிடுகிறது. இதற்கான பொருளியல் காரணங்கள் இருக்கவே செய்தன. வேட்டையின் பலன் நிச்சயமற்று இருந்ததால் பழங்கள், காய்கறிகள், தேன், கிழங்குகள் ஆகிய உணவுப்பொருட்களை சேமிக்கத் தொடங்கினர்.
“காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ” (நற்றிணை:39)
“மருந்து பிறிதில்லை யான் உற்ற நோய்க்கே” (நற்-80)
காமம் மிகுதியுற்று, கூடமுடியாத நிலையில், அதை ஒரு நோய் என்றே கருதினார்கள். “இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிது” எனக் கபிலரும் பாடுகிறார்.
“உள்ளின் உள்ளம் வேமே, உள்ளாது/ இருப்பின் எம் அளவைத்து அன்றே” (குறு:102).“காதலரை நினைத்திருந் தால் பிரிவு என்னும் தீயினால் நினைக்கின்ற என் மனம் வேகிறது. நினையாமல் உயிர் மட்டும் இருந்தால், அதைத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை” எனத் தலைவியும், “பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல/ உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி/ அரிது அவாவுற்றனை நெஞ்சே” (குறு:29) “அவளால் (பெண்ணால்) தன் உள்ளம் மழையில் கரையும் பசுங்கலம் (சுடாத கலம்) போலக் கரைந்ததாக தலைவனும் கூறுகிறான். புணர்ச்சியை இயற்கையாகவே கண்டனர். பண்பாட்டு அசைவானது, சங்க இலக்கியத்தில், அடுத்தத் தளத்திற்கு நகர்ந்து செல்வதையும் காண்கிறோம். கிடைத்த போது களவு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், கிட்டாத போது நோயாகவும் மாறியதைப் பார்த்தோம். ஆனால் சங்கத் தலைவன், தனது தலைவியுடன் ஏற்பட்ட களவுப் புணர்ச்சியானது தனது மனவலிமை, தனது அறிவு ஆகியவற்றைக் குறைத்துவிட்டதாகக் கூறுவது தெரிகிறது.
இவை அனைத்தும் காமத்தின் வெளிப்பாடாய் கூறும் இலக்கிய நூல் .


இப்போது பரணியை பற்றியும் கடைதிறப்பு பற்றியும் பார்க்கலாம்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. முதலாம் குலோத்துங்க சோழன், கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.
கருணாகரன் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி
கலிங்கப் போர் முடிந்து சோழ வீரர்கள் ஏராளமான செல்வங்களுடன் நாடு திரும்புகிறார்கள். வந்து வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் மனைவியர் கதவைத் திறக்க மறுக்கின்றனர். ‘ஏன் இந்தத் தாமதம், ஒரு போர் முடிக்க இத்தனை நாட்களா?’ என்று கோபம் கொண்டு கதவைத் திறக்க மறுக்கிறார்களாம்! வீரர்கள், தங்கள் போர்ப் பராக்கிரமத்தைச் சொல்லி பெருமிதம் கொள்ள நினைத்து வந்த வேளையில் இந்தக் கதவடைப்புப் போராட்டத்தை எதிர்பார்க்கவில்லை. கதவைத் திறக்க வீரர்கள் பாடுவதாய் அமைந்ததுதான் “கடை திறப்பு” என்ற முதல் அத்தியாயம். ..............(தொடரும்)
                                                                                         படம்: நன்றி google

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - எட்டாவது அத்தியாயம்

                                         செருக்களம் சென்ற தன் கணவனைத் தேடிச் சென்றப்  பெண், அம்பொன்று நெஞ்சில் பாய்ந்து அவன் இறந்து கொண்டிரு...