Thursday 30 July 2020

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - ஏழாவது அத்தியாயம்

கவிகள் என்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவிகளைச் சொல்பவர்கள் ஆவார்கள். அத்தகையவருகளுள் செயங்கொண்டார் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். இவர் முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். குலோத்துங்க சோழனுடைய புகழையும் அவனது தலைமைப் படைத்தலைவனான கருணாகரத்தொண்டைமானின் சிறப்பையும் கலிங்கத்துப் பரணி என்னும் நூலைப் பாடி நிலை நிறுத்தியவர்.

இவர் கலிங்கத்துப்பரணி தவிர புகார் நகர வணிகர் பெருமக்களைச் சிறப்பித்து இசையாயிரம் என்ற நூலை சிறப்பித்துப் பாடியுள்ளார். உலா மடல் என்ற பிறிதொரு நூலும் விழுப்பரையர் என்ற தலைவர் மீது பாடியுள்ளார்.

  • கடை திறப்பு

கலிங்கத்தின் மேல் படையெடுத்துச் சென்ற வீரர்கள் வருவதற்குக் கால தாமதம் ஆனதால் அதனைக் கண்டு மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்ததாகவும், அப்பெண்கள் மகிழுமாறும் ஊடல் நீங்கிக் கதவைத் திறக்குமாறும் செய்ய, தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர் பற்றி கூறுவது போலவும் அமைந்தது.




அகப்பொருள்

கலிங்கப் போர் முடிந்து வீரர்கள் சோழ நாடு திரும்புகின்றனர். ஆனால் தாம் வருவதாகக் கூறிய காலம் கடந்து பணி முடித்து வருகின்றனர். காலம் கடந்து வருவதால் மகளிர் ஊடல் கொள்கின்றனர். தம் கணவனை எதிர்கொண்டு வரவேற்காமல் கதவைத் தாழிட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் புலவர் மகளிரைக் கதவு திறக்க வேண்டுகிறார். இது கடை திறப்பு எனும் பகுதியாக அமைகின்றது. மகளிரின் பல்வேறு காதல் செயல்களையும் நிகழ்ச்சிகளையும் நினைவூட்டுகிறார் புலவர். இத்தகைய இனிய பெண்களே! கதவைத் திறவுங்கள் என்று வேண்டுகிறார்


  • அழகியும் ஆடவர் உயிரும்

பெண்கள் கூந்தலில் செங்கழுநீர் மலர்களைச் செருகுகின்றார்கள். செங்கழுநீர் மலர்களை மட்டுமா செருகுகின்றார்கள்? இல்லை! இவ்வுலகத்தில் வாழும் இளைஞர்களின் உயிர்களையும் சேர்த்து அல்லவா செருகுகின்றார்கள்? இதனை விளக்கும் பாடல் வருமாறு:

செக்கச் சிவந்த கழுநீரும்
     செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்கச் செருகும் குழல்மடவீர்
     
ம்பொற் கபாடம் திறமினோ

(கடை திறப்பு : 74)

TVU - c0124 - Audio Button

(செக்கச் சிவந்த = மிகச்சிவப்பான, கழுநீர் = பூ, செகம் = உலகம், குழல் = கூந்தல், கபாடம் = கதவு)

  •  கதவு திறத்தலும் அடைத்தலும்


கணவன்மார் குறித்துச் சென்ற காலம் வந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து மனைவியர் கதவைத் திறந்து வழிமேல் விழி வைத்துப் பார்த்து நின்றனர். கணவன்மார் வரவில்லை. துயரத்தால் வெறுப்பு உற்றுக் கதவைப் படார் எனச் சாத்தினர். இவ்வாறாக இரவு முழுவதும் திறப்பதும் சாத்துவதுமாக இருந்தனர்.


இதனால் கதவில் உள்ள சுழலும் குடுமி தேய்ந்தது. இதனைப் புலவர் நயம்படப் புனைந்துள்ளார்.

வருவார் கொழுநர் எனத் திறந்தும்
     வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
     தேயும் கபாடம் திறமினோ

(கடை திறப்பு : 69)

TVU - c0124 - Audio Button

(கொழுநர் = கணவர், குடுமி = கதவு திறக்கவும் மூடவும் உதவும் அச்சு)

இவ்வாறாகக் கடைதிறப்புப் பகுதி முழுவதும் அகப்பொருள் நிறைந்ததாகச் சுவைபடப் புலவர் புனைந்து இருப்பதை அறிய முடிகின்றது.  ( ( தொடரும்)


 நன்றி... - விக்கிபீடியா தமிழ் ,கூகிள் & முனைவர் - திரு சிலம்பு நா. செல்வராசு



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - எட்டாவது அத்தியாயம்

                                         செருக்களம் சென்ற தன் கணவனைத் தேடிச் சென்றப்  பெண், அம்பொன்று நெஞ்சில் பாய்ந்து அவன் இறந்து கொண்டிரு...