Thursday 30 July 2020

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - ஆறாவது அத்தியாயம்

இந்தப்பரணி என்பது தமிழில் உள்ள தொன்னூற்று ஆறு பிரபந்த வகைகளில் ஒன்றாகும்.

பெயர் முறை

  • பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் "கலிங்கத்துப் பரணி" என அழைக்கப்படுவதாயிற்று.தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி நூல் கலிங்கத்துப் பரணியே ஆகும். இதுவே பிற்காலப் பரணி நூல்களுக்கு வழிகாட்டியாய் அமைந்த நூலாகும். இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. காலம் (1078- 1118-குலோத்துங்க சோழன் காலம்) பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி. சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.

  

  • கடவுள் வாழ்த்து


போர்த்தலைவனாகிய குலோத்துங்கன் நெடிது நின்று ஆட்சி செய்ய வேண்டுமென கடவுளைத் துதித்துப் பாடப்படுகிறது.

  • கடை திறப்பு

கலிங்கத்தின் மேல் படையெடுத்துச் சென்ற வீரர்கள் வருவதற்குக் கால தாமதம் ஆனதால் அதனைக் கண்டு மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்ததாகவும், அப்பெண்கள் மகிழுமாறும் ஊடல் நீங்கிக் கதவைத் திறக்குமாறும் செய்ய, தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர் பற்றி கூறுவது போலவும் அமைந்தது.

  • காடு பாடியது

கலிங்கப் போர்க்களத்தில் நிணக்கூழ் சமைத்த பேய்களின் தலைவியாகிய காளி உறையும் இடமாகிய பாலயைச் சார்ந்த காட்டைப் பற்றிக் கூறுவது. இதில் பாலை நில வெம்மையின் கொடுமை சுவையுடன் கூறப்பட்டுள்ளது.

  • கோயில் பாடியது

காளி உறையும் இடமாகிய காட்டில் நடுவண் அமைந்துள்ள காளிக் கோயிலைப் பற்றிக் கூறுவது. இதில் காளிக் கோயிலின் அடிப்படை(அடிவாரம், அஸ்திவாரம்) அமைத்தது, சுவர் அடுக்கியது, தூண் நிறுத்தியது முதலான செய்திகளைக் கூறுகிறது. குலோத்துங்கன் பல போர்க் களங்களில் பெற்ற வெற்றிச் சிறப்புகள் காட்டில் காணப்படும் பல வகைக் காட்சிகளோடு தொடர்புப் படுத்திக் கூறப்படுகிறது.

  • தேவியைப் பாடியது

காளிக் கோயிலைப் பற்றிக் கூறியபின் காளியைப் பற்றிக் கூறுவது. காளியின் உறுப்புகள் பற்றியும், குலோத்துங்க சோழனின் புகழும் இடைஇடையே கூறப்படுகிறது.

  • பேய்ப்பாடியது

காளியைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் இயல்புகள் கூறப்படுகிறது. பேய்களின் உறுப்பு நலங்கள் பற்றி நகைச் சுவையோடு விளக்கப்படுகிறது. சில பேய்களின் உறுப்பு நலங்கள் குறைந்து காணப்படுவதாகவும் , குலோத்துங்கனின் பல போர்க்கள வெற்றிகள் குறித்தும் கூறப்படுகிறது.

  • இந்திரசாலம்

பேய்கள் சூழ காளி அரசு வீற்றிருந்த அமயத்தே ( அவையில்) இமயத்திலிருந்து வந்த முது பேய் ஒன்று தான் கற்று வந்த இந்திர சாலங்களை(மாய வித்தைகள்)க் காட்டுவதாக நகைச்சுவையுடன் கூறப்படுகிறது.

  • இராச பாரம்பரியம்

குலோத்துங்கனின் குடியின் வரலாறு கூறப்படுகிறது. கரிகால் சோழன் தொடங்கி சோழ வரலாறு கூறப்படுகிறது

  • பேய் முறைப்பாடு

பரணிப்போர் நிகழ்வதற்கான முற்குறிகளைப் பேய்கள் கண்டதகக் கூறுவது இப்பகுதி. பேய்களின் பசிக்கொடுமை, அப்பேய்களுக்கு ஏற்படும் சில நல்ல குறிகள், இமயத்தில் இருந்து பேய் தான் வந்த வழியில் கலிங்கத்தில் கண்ட தீக்குறிகள், இவைகளைக் கேட்டு கணிதப்பேய் கனவும் நனவும் கண்டு, குலோத்துங்கனால் பரணிப்போர் உண்டு எனக் கூறுவதும், பின்னர் நிகழப்போவதை முன்னறிவிப்பாகக் கூறும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

  • அவதாரம்

கலிங்கப்போர்த் தலைவனான குலோத்துங்கன் சிறப்பை காளி பேய்களுக்குக் கூறுவது போல் அமைக்கப்பட்ட இப்பகுதியில் குலோத்துங்க சோழனின் பிறப்பு, வளர்ப்பு, இளவரசுப்பட்டம், முடி சூடியது முதலிய செய்திகள் விளக்கப்படுகிறது. சாளுக்கிய குலத்தில் பிறந்து தாய்க் குலமாம் சோழ குலத்து அரசுரிமை பெற்றது , இளவரசராய் இருந்த போது வட திசை நோக்கிப் போருக்கு எழுந்தது, சோழன் இறந்த சமயத்தில் சோழ நாட்டை நிலைபெறுத்தி முடிசூடியது , பெரு மன்னனாய் சிறப்புற ஆட்சி செய்தது, பாலாற்றங்கரைக்கு நால்வகைப் படையுடனும், தேவியருடனும், சிற்றரசர்கள் சூழவும் புறப்பட்ட சிறப்பு, தில்லையிலும், அதிகையிலும் தங்கிச் சென்று காஞ்சியை அடைந்தது ஆகிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

  • காளிக்குக் கூளி கூறியது

காஞ்சியை அடைந்த குலோத்துங்கண் ஒரு சித்திரப் பந்தர் கீழ் அமைச்சர் முதலியோருடன் வீற்றிருந்த சிறப்பும் சிற்றாரசர்கள் பலரும் வந்து திறை செலுத்தியதும், திறை செலுத்தாத கலிங்க மன்னன் மேல் குலோத்துங்கனின் ஆனைப்படி கருணாகரத் தொண்டமான் நால்வகைப் படையுடன் போருக்கெழுந்த இயல்பும் கூறப்படுகிறது. பல ஆறுகளைக் கடந்து கலிங்கம் அடைந்ததும், கலிங்கத்தை எரிகொளுவி அழித்ததும், அது கண்ட கலிங்கமக்கள் அரசனிடம் முறையிட்டதும் , அவன் வெகுண்டெழுந்ததும், அமைச்சர் முதலானோர் அவனுக்கு அறவுரைப் பகர்ந்ததும், அதனை மதியாமல் கலிங்க மன்னன் போருக்குச் சென்றதுமான செய்திகள் விளக்கப்படுகிறது.

  • போர் பாடியது

கலிங்கப்பேய் காளிக்கு போரின் இயல்பை கூறுவதாக அமைந்தது. நால்வகைப் படையின் செயல்கள், தீவிரமான போர்முறை , கருணாகரன் தன் களிற்றை உந்தியதும் இரு பக்கப் படைகளும் ஒருவரை ஒருவர் பொருத செய்திகளும், இரு திறத்திலும் நால்வகைப் படைகளும் பல அழிந்ததும், போரின் கடுமைத் தாங்காமல் கலிங்க மன்னன் ஓடி ஒளிந்ததும், அவனைப் பற்றிக் கொணர தன் படைகளோடு ஒற்றர்களையும் கருணாகரத்தொண்டைமான் அனுப்பிய செய்தியும், கலிங்க வீரர்கள் ஒரு மலை உச்சியில் மறைந்து நிற்பதைப் பற்றி அறிந்ததும் அது மாலை வேளை ஆனதால் போரிடாமல், விடியும் வரை காத்துநின்று விடிந்த பின் கலிங்கரை அழித்ததும், கலிங்க வீரர்கள் உருக்குலைந்து நாற்புறமும் ஓடியதும், அங்கு தன் கவர்ந்த செல்வங்களுடன் குலோத்துங்கன் பால் சென்று பணிந்து நின்றதுமான செய்திகள் அழகுபடக் கூறப்பட்டுள்ளன.

  • களம் பாடியது

போரைப் பற்றிச் சொல்லி முடித்த பேய் காளியைப் போர்க்களம் காணுமாறு அழைக்க காளி வந்து களத்தைக் கண்டு, அக்காட்சிகளைப் பேய்களுக்குக் காட்டுமாறு அமைந்துள்ளது. காட்சிகளைக் காட்டிய பின், நீராடி கூழட்டு உண்ணுமாறுபேய்களைப் பணிக்கிறாள் காளி. அங்கணமே பேய்கள் பல் துளக்கி, நீராடி கூழ் சமைத்து உண்ணும் இயல்பு கூறப்படுகிறது. பேய்கள் பாடும் வள்ளைப் பாட்டில் குலோத்துங்கனின் புகழ் பாடப்படுகிறது. முடிவில் பேய்கள் தங்களுக்கு பரணிக் கூழ் அளித்த குலோத்துங்கனை வாழ்த்துவதாக கலிங்கத்துப் பரணி முடிகிறது.  ( ( தொடரும்)


           நன்றி... - விக்கிபீடியா தமிழ் & கூகிள்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - எட்டாவது அத்தியாயம்

                                         செருக்களம் சென்ற தன் கணவனைத் தேடிச் சென்றப்  பெண், அம்பொன்று நெஞ்சில் பாய்ந்து அவன் இறந்து கொண்டிரு...