Tuesday, 28 July 2020

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - ஐந்தாவது அத்தியாயம்

  • ரணி உருவான கதை
கலிங்கத்துப் பரணி உருவானதற்கான காரணம் பற்றிக் கதை ஒன்று உண்டு. குலோத்துங்கன் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தான். அப்போது தென்னவர், வில்லவர் முதலிய மன்னர்கள் திறை (தோற்ற மன்னர் தன்னை வென்றமன்னர்க்குக் கொடுக்கும் நிதி) செலுத்திப் பணிந்தனர். வட கலிங்க மன்னன் மட்டும் திறை செலுத்தாமல் இருந்தான். இதனை அறிந்த குலோத்துங்கன் சினம் கொண்டான். அவன் சினத்தைக் கண்டு ஏனைய மன்னர்கள் நடுங்கினார்கள். 'வட கலிங்க மன்னனின் அரண்கள் (மதில்கள்) வலிமை உடையனவாம்! அவற்றை அழித்து வாருங்கள்; அவனுடைய யானைகளை வென்று வாருங்கள்' என்று கூறினான். அந்த அளவில் குலோத்துங்கன் தளபதி கருணாகரன் எழுந்து நானே சென்று கலிங்கனை அடக்குவேன் என்று சபதம் இட்டான். பின்னர்க் கலிங்கப் போர் மூண்டது. சோழர்கள் வெற்றி வாகை சூடினர் என்று கதை முடிகிறது.

  • கலிங்கம் வென்ற கருணாகரன்
குலோத்துங்கனின் படைத்தலைவர்களுள் சிறந்தவன் கலிங்கத்துப் பரணியின் இன்னொரு கதாநாயகன் கருணாகரன் ஆவான். குலோத்துங்கன் ஆணையின்படி கலிங்க நாட்டின் மீது படை எடுத்துச் சென்று அந்நாட்டை அழித்தவன். திருவரங்கன் எனும் இயற்பெயரை உடையவன். 'வேள்' 'தொண்டைமான்' எனும் பட்டங்கள் குலோத்துங்கனால் இவனுக்கு வழங்கப்பட்டன. இவன் பல்லவர் குலத்தைச் சேர்ந்தவன். கலிங்கப் போரினால் குலோத்துங்கனுக்குப் புகழ் தேடித் தந்தான் கருணாகரன்; கருணாகரனுக்குப் பரணியின் வாயிலாகப் புகழ் தேடித் தந்தார் செயங்கொண்டார்.
  1. பரணி
பண்டைத் தமிழ் இலக்கியத்தை அகம், புறம் என்று பிரிப்பர். தமிழர்களின் காதல் வாழ்க்கையைப் பாடுபவை அக இலக்கியங்கள். வீரம், கொடை, மானம் முதலியவற்றைப் பாடுபவை புற இலக்கியங்கள். பரணி புற இலக்கியம். பாட்டுடைத் தலைவனின் வீரமே இந்த இலக்கியத்தின் மையக் கருவாகும். இது பற்றிப் பன்னிரு பாட்டியல் கூறுவது வருமாறு:
வஞ்சி மலைந்த உழிஞை முற்றி
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானை வெங்களத்தில்
குருதிப் பேராறு பெருகும் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே
(பன்னிரு: 240)
மன்னன் பகைவனது நாட்டை வெல்வதற்காக வஞ்சிப் பூமாலை அணிந்து போர்க்களம் சென்றான். உழிஞைப் பூமாலை அணிந்து பகைவனது மதிலை முற்றுகை இட்டான். தும்பைப் பூமாலையைச் சூடிப் பகைவனுடன் போர் செய்தான். பகை வீரர்கள் மடிந்தனர்; குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பகைவனை வென்றான். இவ்வாறு படை எடுத்துச் சென்று வாகை மாலை சூடிய மன்னனின் வீரத்தைப் புகழ்வதே பரணி இலக்கியம் ஆகும்.
பரணி, வீரத்தைப் பற்றிப் பாடினாலும் காதல் இலக்கிய மரபையும் கொண்டு உள்ளது. மகளிரை அழைத்துப் போர் பற்றிய செய்திகளைக் கூறும் பகுதி 'கடைதிறப்பு' எனப்படும். 'தலைவன் புகழைக் கேட்கக் கதவைத் திறவுங்கள்' என்று கூறுவது கடைதிறப்பு ஆகும். இப்பகுதி முழுவதும் காதல் இலக்கிய மரபை அடியொற்றி அமைந்துள்ளது.
2. பரணி பெயர்க் காரணம்
பரணி என்பது நட்சத்திரத்தின் பெயர்; காளியையும் யமனையும் தெய்வங்களாகக் கொண்ட நாள். பரணி நாளில் பிறந்தவன் பெரும் வீரனாவான் என்பதும் நம்பிக்கை. எனவே போர்க்களத்தில் யானைகள் பலவற்றைக் கொன்று, பல உயிர்களையும் யமன் கவர்ந்து கொள்ளுமாறு செய்து, அரசனின் வீரம் வெளிப்பட, போர்க்களத்தில் காளிக்குக் கூழ் சமைத்து வழிபட்ட நிகழ்ச்சிகளைக் கூறுவதால் இந்நூல் பரணி என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். காளிக்கு உரிய நாள் பரணி. காளியைத் தெய்வமாகக் கொண்டு பாடப்படுவதால் இந்நூலுக்குப் பரணி எனப்பெயர் வந்தது என்றும் விளக்கம் கூறுவர்.
                   நன்றி...-முனைவர் - திரு சிலம்பு நா. செல்வராசு & கூகிள்


கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - எட்டாவது அத்தியாயம்

                                         செருக்களம் சென்ற தன் கணவனைத் தேடிச் சென்றப்  பெண், அம்பொன்று நெஞ்சில் பாய்ந்து அவன் இறந்து கொண்டிரு...